Home » » தொப்பை வேகமா குறையணுமா? அப்ப இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க...

தொப்பை வேகமா குறையணுமா? அப்ப இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க...


தொப்பையைக் குறைக்க எத்தனையே வழிகள் இருந்தாலும், உடற்பயிற்சிக்கு இணை எதுவும் வர முடியாது. அதிலும் யோகாவை ஒருவர் தினமும் செய்து வந்தால், அதனால் தொப்பை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் யோகாவுடன் ஒருசில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு தொப்பை இருந்தால், அது இதய நோய்கள், சர்க்கரை நோய், செரிமான பிரச்சனைகள், வாய்வு தொல்லைகள் மற்றும குறிப்பிட்ட சில புற்றுநோய்களாலும் அவஸ்தைப்படக்கூடும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனங்களை தினமும் செய்து வந்தால், தொப்பை வேகமாக குறையும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் உடலின் மேல் பகுதி மற்றும் முதுகுப் பகுதியை வலிமைப்படுத்தும். மேலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும். அதற்கு தரையில் விரிப்பை விரித்து, குப்புறப்படுத்து, கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும். பின் இரண்டு உள்ளங்கைகளையும் மார்பின் அருகில் வைக்கவும். பின்பு உள்ளங்கைகளை அழுத்தி, உடலை மேல் நோக்கி உயர்த்தி 30 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை 5-6 முறை செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவர்கள்

இந்த ஆசனத்தை ஹெர்னியா, முதுகு பகுதியில் காயம், அறுவை சிகிச்சை வலி மற்றும் கர்ப்பிணிகள் செய்யக்கூடாது.

நாகாசனம்

இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

கும்பகாசனம்

இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் குப்புறப்படுத்து, பின் புஷ்-அப் நிலையில் 15-30 நிமிடம் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே சாதாரண நிலைக்கு திரும்பவும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவர்கள்

இந்த ஆசனத்தை முதுகு அல்லது தோள்பட்டையில் காயங்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் படத்தில் காட்டியவாறு தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும்.

தனுராசனம்

தனுராசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, படத்தில் காட்டியவாறு உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

Popular Posts